1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2017 (11:36 IST)

குளிக்கும்போது வீடியோ எடுத்ததால் தீக்குளிக்க முயன்ற தாய்

பெரம்பலூரில் அனிதா என்ற பெண்ணை ஸ்டூடியோ நடத்தி வரும் நபர் குளிக்கும் போது வீடியோ எடுத்து மிரட்டியதால் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றுள்ளார்.


 

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவி அனிதா(30) நேற்று பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். காவல்துறையினர் அவரை தடுத்து காப்பாற்றினர்.
 
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனிதாவிடம் தீக்குளிக்க முயற்சித்த காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அனிதா வசிக்கும் பகுதியில் வீடியோ ஸ்டூடியோ நடத்தி வரும் வெற்றிவேல் என்பவர் அனிதா வீட்டில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு வீடியோ எடுத்துள்ளார்.
 
அதனை வைத்து சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் இல்லையென்றால் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி வந்துள்ளார். இதுவரை இப்படி அனிதாவை மிரட்டி 16 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணம் பறித்துள்ளார் வெற்றிவேல். இதை சமாளிக்க முடியாமல் தீக்குளிக்க முயன்றேன் என அனிதா கூறியுள்ளார்.
 
இதையடுத்து காவல்துறையினர் வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.