செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜூன் 2020 (07:59 IST)

சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர் – கோவையில் பரபரப்பு!

கோவையில் தனது காதலரை திருமணம் செய்துகொண்ட பெண்ணை அவரது பெற்றோர் கடத்தி வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய இருப்பதாக அவரது கணவர் புகாரளித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடன் ஒன்றாக வேலைப் பார்க்கும் சக்தி தமிழினி என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் இருவரும் வேறு வேறு சாதி என்பதால் சக்தியின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஜூன் 5 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

அதன் பின் கார்த்திகேயனின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த 19 ஆம் தேதி கார்த்திகேயன் வீட்டில் இல்லாத போது, அவரது தாயை தாக்கிவிட்டு சக்தியைக் கடத்திச் சென்றுள்ளனர் அவரது பெற்றோர். அதையடுத்து தனது மனைவி சக்தியை மீட்டுத்தரக்கோரி துடியலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் கார்த்திகேயன்.

மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ‘ சக்தியின் பெற்றோர், அவரை தனி அறையில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்துகின்றனர். மேலும் அவருக்கு வேறொரு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கின்றனர். அவரை என்னிடம் மீட்டுத்தர வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.