1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (15:31 IST)

ஜி.கே வாசனுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்குமா.? தேர்தல் ஆணையம் முக்கிய தகவல்..!!

சைக்கிள் சின்னம் ஒதுக்க கோரி ஜி கே வாசன் தொடர்ந்த வழக்கில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமிழ் மாநில காங்கிரசின் மனு பரிசீலிக்கபடும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் வேண்டும் எனக்கோரி அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், எதிர்வரும் மக்களவை தேர்தலில் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி கடந்த 6ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்ததாக கூறியிருந்தார். அடுத்த நான்கு வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கலாம் என்ற நிலையில், தங்களது மனு மீது இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் ஜிகே வாசன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
 
கடந்த 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலைபோல இந்த தேர்தலுக்கும்  தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்தார். 
 
இந்த மனு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபல் ஆஜராகினார்.

அவர், ஆணையத்திடம் தமிழ் மாநில காங்கிரஸ் அளித்த மனுவில் குறைகள் இருப்பதாகவும், அதனால் அந்த குறைகளை சரி செய்து மீண்டும் அளித்தால் அந்த மனு பரிசீலிக்கப்படும் என கூறினார்.
 
மேலும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமிழ் மாநில காங்கிரசின் மனு பரிசீலிக்கபடும் எனவும் தேர்தல் ஆணையம் சார்பில்  தெரிவிக்கப்பட்டது.


இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழ் மாநில காங்கிரசின் மனுவை முன்னுரிமை அளித்து தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்க உத்தரவிட்டு?மனுவை முடித்து வைத்தனர்.