1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 ஆகஸ்ட் 2022 (08:31 IST)

தமிழகத்தில் கடுமையான மின் வெட்டு ஏற்படுமோ?

தமிழகத்தில் கடுமையான மின் வெட்டு ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் பொதுமக்கள் இடையே ஏற்பட்டுள்ளது.


வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதற்கும் மின்சாரத்தை வெளிமாநிலங்களில் விற்பதற்கும் தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 13 மாநிலங்களும் மின் பகிர்மான வகையில் ரூ.5,085 பாக்கி நிலுவையில் உள்ளதாகவும் இதனை செலுத்த தவறியதால் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், மணிப்பூர், மிசோரம், ஜார்கண்ட், பீகார், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர் ஆகிய 13 மாநிலங்கள் இதில் அடங்கும். இந்த தடை காரணமாக மாநிலங்களுக்கு இடையே மின் பகிர்வு நடைபெறாது என்பதால் பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசை பொறுத்தவரை, ரூ.926.16 கோடி பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் தமிழகத்தில் கடுமையான மின் வெட்டு ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் பொதுமக்கள் இடையே ஏற்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள அதிகாரி ஒருவர் கூறியதாவது, தமிழகத்தில் மின் உற்பத்தி உபரியாக இருப்பதால், வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. காற்றாலை, அனல் மின் நிலையம் உள்பட அனைத்து மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து முழு அளவில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் தமிழகத்தில் மின் வெட்டு ஏற்படாது.