ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 மார்ச் 2019 (19:01 IST)

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் மறக்கப்பட்டதா? மறைக்கப்பட்டதா?

சமீபத்தில் தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரம் பொள்ளாச்சி பாலியல் விவகாரம். இந்த விவகாரம் 'நக்கீரன்' வெளியிட்ட வீடியோவுக்கு பின்னர் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய செய்தது. திரையுலகினர்களும் சமூக நல ஆர்வலர்களும் இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று குரல் கொடுத்தனர். தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர், மாணவியர்கள் உள்பட பலர் இதுகுறித்து போராட்டம் நடத்தினர். ஒரு வாரம் இந்த விவகாரம் ஊடகங்களின் தலைப்பு செய்தியில் இருந்தது. ஆனால் வழக்கம்போல் இந்த விவகாரம் தற்போது மறக்கப்பட்டுவிட்டது. உண்மையில் இந்த விவகாரம் மறக்கப்பட்டதா? அல்லது மறைக்கப்பட்டதா? 
 
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நக்கீரன் வெளியிட்ட வீடியோவை அடுத்து போராட்டங்கள் பெருமளவு வெடித்ததால், சுதாரித்த போலீசார்கள் அந்த குற்றத்தில் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்ட நால்வரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்தவுடன் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியலாக்க முயற்சி செய்தன. 
 
அதே நேரத்தில் தனது மகன் மீது அவதூறாக இணையதளங்களில் செய்தி வெளியிடுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது பொள்ளாச்சி ஜெயராமன் புகார் மனு ஒன்றை கொடுத்தார். இந்த புகாருக்கு பின் திமுகவும் இந்த விஷயத்தில் அடக்கி வாசிக்க தொடங்கிவிட்டது.
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நால்வர் அதிரடியாக குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிபிசிஐடி இந்த வழக்கை கையில் எடுத்து விசாரணை செய்து வரும் நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றக்கோரி தமிழக அரசே அரசாணை வெளியிட்டது. இருப்பினும் இன்னும் சி.பி.ஐ இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து முடிவெடுக்கவில்லை
 
.இந்த நிலையில், இந்த வழக்கில் புகார் தெரிவித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனைத் தாக்கியதாக அதிமுக பிரமுகர் பார் நாகராஜன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. பார் நாகராஜனை இந்த வழக்கோடு சம்பந்தப்படுத்த சிலர் முயற்சிக்க, அவர் இதுகுறித்து விளக்கம் தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டார்.  
 
இந்த நிலையில் இந்த விவகாரம் அதிமுகவுக்கு எதிரான ஒரு விஷயமாக மட்டுமே இருந்த நிலையில் திடீர் திருப்பமாக கோவை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் என்பவரின் மகன் மணிமாறன் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. எனவே இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி போலீஸார் மணிமாறனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். விரைவில் அவர் சிபிசிஐடி முன் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் மணிமாறனை உடனே ஆஜராகுமாறு சம்மன் அனுப்பிய சிபிசிஐடி போலீசார், இதுவரை பொள்ளாச்சி ஜெயராமன் மகனை ஏன் விசாரணை செய்யவில்லை என்று திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 
மொத்தத்தில் பொள்ளாச்சி விவகாரத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டு தரப்பினர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால் இரு தரப்பினர்களும் இந்த விவகாரத்தை திசை திருப்ப அல்லது மறக்கடிக்கும் முயற்சியில் இருப்பதாகவே தெரிகிறது. மற்ற விஷயம் போல் மறந்துவிடுவதற்கு பொள்ளாச்சி விவகாரம் ஒரு சாதாரண விஷயம் இல்லை. நூற்றுக்கணக்கான இளம்பெண்களின் வாழ்க்கை குறித்த விஷயம். இனிமேலும் ஒரு பெண் கூட இதுபோன்று கயவர்களிடம் ஏமாறாமல் இருக்க உடனடியாக பிடிபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என்பது மட்டுமின்றி இன்னும் இந்த குற்றத்தில் ஈடுபட்டு வெளியே சுதந்திரமாக நடமாடி வரும் குற்றவாளிகளையும் சட்ட வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீசார் இந்த கோரிக்கையை மனதில் வைத்து விசாரணை செய்வார்கள் என்று நம்புவோம்