திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 7 செப்டம்பர் 2017 (09:43 IST)

மீண்டும் சி.ஆர்.சரஸ்வதி: யார் அந்த 9 பேர்?

மீண்டும் சி.ஆர்.சரஸ்வதி: யார் அந்த 9 பேர்?

நேற்று முன்தினம் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கூட்டினார். இந்த கூட்டத்துக்கு 105 எம்எல்ஏக்கள் வருகை புரிந்தனர்.


 
 
இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். 111 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கையொப்பமிட்டனர். தினகரன் அணியில் இருந்து 9 எம்எல்ஏக்கள் முதல்வருடன் தொடர்புகொண்டு, நீங்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம், அரசு நீடிக்க உறுதுணையாக இருப்போம் என கூறியுள்ளனர். மூன்று கூட்டணி கட்சி எம்எல்ஏக்களும் எங்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர் என தெரிவித்தார்.
 
இதனையடுத்து நேற்று முன்தினம் தினகரன் அணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் பேசும்போது எடப்பாடி பழனிசாமியை எங்கள் அணியை சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆதரவு தெரிவித்ததாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.
 
அந்த 9 எம்எல்ஏக்களின் பெயரை வெளியிட்டால், அவர்களை ஊடகங்கள் முன்னால் நிறுத்தி எது உண்மை என்பதை நிரூபிக்கத் தயார் என சவால் விட்டனர். இந்நிலையில் இதே கேள்வியை அதிமுக செய்திதொடர்பாளர் சிஆர் சரஸ்வதியும் எழுப்பியுள்ளார்.
 
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அடிக்கடி ஊடகத்துக்கு பேட்டியளித்து, அம்மா நலமாக இருக்கிறார், அவர் இட்லி சாப்பிட்டார், விரைவில் வீடு திரும்புவார் என கூறிவந்த சி.ஆர்.சரஸ்வதி ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் சசிகலா அணியில் இருந்தார். அப்போதும் அடிக்கடி ஊடகங்களை சந்தித்து சசிகலாவுக்கு ஆதரவாகவும், ஓபிஎஸ்ஸுக்கு எதிராகவும் பேசிவந்தார்.
 
ஆனால் சமீப காலமாக சி.ஆர்.சரஸ்வதி ஊடகங்களில் பேசுவது இல்லாமல் இருந்தது. இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் வந்துள்ளார். ஜெயக்குமார் பேசியது குறித்து சி.ஆர்.சரஸ்வதி சென்னை அடையாரில் தினகரன் இல்லம் அருகே நேற்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
 
அதில், எங்கள் அணி எம்எல்ஏக்கள் 9 பேர் எடப்பாடி அணிக்கு ஆதரவளித்திருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தயவுசெய்து பொத்தம் பொதுவாக 9 பேர் ஆதரவளித்துள்ளனர் என்று சொல்லாமல், யார் அந்த 9 எம்எல்ஏக்கள் என்று பெயர்களைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொண்டார்.