திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 29 அக்டோபர் 2018 (13:06 IST)

மீ டூ எங்கிருந்து தொடங்கப்பட வேண்டும் –சிறுமி ராஜலட்சுமி கொலை

சேலம் மாவட்ட சிறுமி ராஜலட்சுமி கொலை சம்மந்தமாக சமூக ஆர்வலர்கள் மற்றும் கள செயல்பாட்டாளர்கள் ராஜலட்சுமியின் பெற்றோரோடு கைகோர்த்துள்ளனர்.
   

சேலம் மாவட்டம் உள்ள தளவாய்பட்டி கிராமத்தில் வசித்துவந்த சாமிவேல். சின்னப்பொண்ணு ஆகிய பட்டியலின தம்பதியினரின் கடைசி மகள் 13 வயதான ராஜலட்சுமி. அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். சாமிவேல் குடும்பம் தண்ணீர் பிடிக்க அருகில் உள்ள தினேஷ்குமாரின் வீடடிலுள்ள பைப்பைப் பயன்படுத்தி வந்துள்ளனர். தினேஷ்குமாரின் குடும்பம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தது.

இந்நிலையில் அங்கு தண்ணீர் பிடிக்க சென்ற ராஜலட்சுமிக்கு தினேஷ்குமார் மூலம் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இதை சிறுமி ராஜலட்சுமி தனது தாயிடம் கூறியுள்ளாள். இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார் ராஜலட்சுமியின் வீட்டுக்கு வந்து தாய் சின்னப்பொண்ணுவின் கண் முன்னாலேயே ராஜலட்சுமியின் தலையைத் துண்டித்து விட்டு காவல்நிலையம் சென்று சரணடைந்துள்ளார்.

இதுகுறித்த விசாரணையில் ‘தினேஷ்குமார் ராஜலட்சுமியை வெட்டும்போது அவர்களின் சாதியைக் கூறித் திட்டிவிட்டு அதன்பிறகே தலையை வெட்டி தனியாக எடுத்துச் சென்றதாகவும், தினேஷ்குமாரின் மனைவி தலையை இங்கு ஏன் எடுத்து வருகிறாய் அங்கேயே போட்டுவிட்டுவா என அவரது மனைவிக் கூறியதாகவும்’ ராஜலட்சுமியின் தாய் சின்னப்பொண்ணு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

போலிஸில் சரணடைந்துள்ள தினேஷ்குமாரின் மனைவி தனது கணவனுக்கு மனநிலை சரியில்லை என்றும் அவரை முனிப் பிடித்துள்ளது என்றும் முதலில் வழக்கைத் திசைதிருப்பப் பார்த்துள்ளார். ஆனால் மருத்துவப்பரிசோதனையில் அவர் கூறுவது பொய் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் ’தினேஷ்குமார் மீது எஸ்.சி எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வாங்கித் தர காவல்துறை சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் பாலியல் அத்துமீறல்களுக்கெதிரான மிடூ இயக்கம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறலைத் தனது தாயிடம் சொன்னதற்கே ஒரு சிறுமி தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ள நிகழ்விற்கு இந்த பொது சமூகம் எந்த வித எதிர்வினையும் காட்டாமல் மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக ஒடுக்குமுறை மற்றும் பொருளாதார விளிம்புநிலையில் உள்ள ராஜலட்சுமி போன்ற சிறுமிகளின் மரணத்தில் இருந்தே மிடூ இயக்கம் தொடங்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது சிறுமியின் பெற்றோரோடு எவிடென்ஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர் உடுமலைப்பேட்டை படுகொலையில் தனது கணவர் சங்கரை இழந்த கௌசல்யா போன்றோர் கைகோர்த்துள்ளனர்.