செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 3 அக்டோபர் 2018 (16:11 IST)

இளவரசன் விசாரணைக் கமிஷனின் ஒட்டுமொத்த செலவு எவ்வளவு தெரியுமா?!!

தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளவரசனின் விசாரணை ஆணையத்துக்கு இதுவரை செலவிடப்பட்டுள்ள தொகை 2 கோடியே 17 லட்சம் என தகவல் அறியும் சட்டம் தெரிவித்துள்ளது

தர்மபுரியைச் சேர்ந்த இளவரசன் – திவ்யா காதல் விவகாரத்தில் ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளவரசனின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் தனி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது.

கடந்த 2013 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த கமிஷனுக்கு இதுவரையில் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்து இந்த வழக்கில் இளவரசன் சார்பில் ஆரமபம் முதலே ஈடுபட்டு எவிடன்ஸ் அமைப்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றுள்ளது.

இதுவரையில் இந்த கமிஷனுக்கு 2,17,29,388 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஒரு நீதிபதி உள்பட மொத்தம் 9 பேர் உள்ள இந்த ஆணையத்திற்கு இதுவரை சம்பளப் பணமாக 1,98,23,817 ரூபாயும் இதர செலவுகளுக்காக 19,05,571 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.

எவிடென்ஸ் அமைப்பைச் சேர்ந்த எவிடென்ஸ் கதிர் தனது முகநூல் பக்கத்தில் இதுகுறித்து அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். அதில் ‘இறந்துபோன இளவரசனின் குடும்பத்தினருக்கு இதுவரை ஒரு ரூபாய் நிவாரணம் கூட கிடைக்கவில்லை. ஆனால் இளவரசனுடைய மரணத்தை விசாரிக்க கூடிய விசாரணை கமிஷினின் செலவு இரண்டு கோடிக்கு மேல் தாண்டியிருக்கிறது.’ எனத் தெரிவித்துள்ளார்

மேலும் விசாரணைக் கமிஷன்களின் செயல்பாடு குறித்து ’இதுபோன்ற விசாரணை கமிஷனின் முடிவுகள் தமிழகத்தில் பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு உரிய நீதியை பெற்றுக் கொடுத்ததில்லை. ஆனால் நியமிக்கப்படுகிற ஆணையங்களுக்கான செலவுகள் கோடிக்கணக்கில் ஏற்படுகிறது. நீதிமன்றத்தில் இதுபோன்ற நடத்தினாலும் ஓரளவு நீதி கிடைப்பதற்கு வாய்ப்பாக இருக்கும். இதுபோன்ற கமிஷன் நியமிக்கப்படுவதினால் நீதிமன்றத்திலும் வழக்கினை நடத்த முடியாத நிலை ஏற்படுகிறது’ என தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் கூட சமீபத்தில் இதுபோன்ற விசாரனை கமிஷன்களால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது.