வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 21 மே 2020 (07:56 IST)

மதுபான கடை திறப்பதில் தாமதம்: புதுவை கவர்னரை அவசரமாக சந்தித்த கலால்துறை அமைச்சர்

தமிழகத்தில் கடந்த 16ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் அண்டை மாநிலமான புதுவையிலும் 19ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது. ஆனால் தற்போது வரை அங்கு மதுபான கடைகள் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
மதுபான கடைகளுக்கு விதிக்கப்படும் வரிகள் குறித்த கோப்பு கவர்னரின் பார்வையில் இருப்பதாகவும் இன்னும் அந்த கோப்பில் அவர் கையெழுத்திடவில்லை என்பதால் மதுபான கடைகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் கவர்னர் மாளிகையில் இருந்து திடீரென புதுவை கலால் துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்களுக்கு நேற்று அழைப்பு வந்தது இந்த அழைப்பின் பெயரில் கவர்னர் மாளிகையில் அமைச்சர் நமசிவாயம் கவர்னரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தலைமைச் செயலாளர் அவர்களும் உடனிருந்தார்
 
இந்த சந்திப்பில் மதுபான கடைகள் திறப்பது குறித்தும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது. சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலால் துறை அமைச்சர் ’புதுச்சேரியில் மதுபான கடைகள் திறப்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை என்று கவர்னர் கூறியதாகவும் ஆனால் அதே நேரத்தில் புதுவையில் கடை இருந்தால் தமிழகத்தில் உள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் பகுதியை சேர்ந்த மக்கள் அதிக அளவில் புதுவைக்கு வந்து மது வாங்க கூடும் என்றும் அதனால் கொரோனா தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் ஆளுநர் காட்டியதாகவும் மக்கள் நலனே முக்கியம் என்று அவர் குறிப்பிட்டதாகவும் கூறினார். இதுகுறித்து முதலமைச்சருடன் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
 
இதனை அடுத்து புதுவையில் மதுபான கடைகள் எப்போதும் திறக்கும் என்பது உறுதி செய்யப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது