வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (19:00 IST)

பசியால் இனி ஒரு உயிர்கூடபோகாத நிலையை உருவாக்கவேண்டும்- விஜயகாந்த்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் வறுமையால் இரண்டு உயிர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், ‘’ பசியால் இனி ஒரு உயிர்கூடபோகாத நிலையை உருவாக்கவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உணவில்லாமல் உயிரிழந்த இருவரை புதைக்க பணம் இல்லாததால் 7 நாட்கள் பிணத்துடன் அவரது குடும்பத்தினர் இருந்துள்ள சம்பவத்தை கேட்டு எனது மனம் ரணமாகி போனது.

தனி ஒருவனுக்கு உணவு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி.  ஆனால் இன்றைய நிலையில் சாலையில் படுத்துறங்கும் 90 சதவீத மக்கள் வறுமையில் உணவு இல்லாமல்தான் உறங்கும் நிலை உள்ளது.

எத்தனை தொழில் நுட்பங்கள் பெருகினாலும், எத்தனை மாற்றங்கள் வந்தாலும் பசி, பட்டினி, பஞ்சம் போன்ற கொடுமைகளை வெல்ல முடியாமல் மனித குலமே அழிந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் முழுமையான உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் மூன்று வேளை உணவு கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி ஒவ்வொரு வார்டுக்கு ஒரு அமைச்சரை நியமித்து ஓட்டு வாங்கும் அரசியல் மட்டும் செய்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.