வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 27 டிசம்பர் 2016 (22:50 IST)

சோதனை நடத்த எங்களுக்கு அதிகாரம் உள்ளது: வருமான வரித்துறை

ராமமோகன ராவ் வீட்டிலும் சோதனை நடத்துவதற்கான அதிகாரம் வருமான வரித்துறைக்கு உள்ளது என்று வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.


 

இது குறித்து வருமான வரித்துறை அளித்துள்ள விளக்கத்தில், “ராம மோகன் ராவின் மகன் விவேக்குக்கும், தொழில் அதிபர் சேகர்ரெட்டிக்கும் தொடர்பு உள்ளது. அதற்கான ஆதாரங்கள் போதுமான அளவுக்கு உள்ளது. அந்த அடிப்படையில்தான் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனை நடத்துவதற்காக விவேக் பெயரில் வாரண்ட் பெறப்பட்டது. அந்த வாரண்டை வைத்துதான் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.

சோதனைக்கு உட்படுத்தப்படும் ஒருவரது உறவினர்கள் அனைவரது வீட்டிலும் சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் விவேக்கின் தந்தை என்ற அடிப்படையில் ராம மோகன் ராவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அதற்கான அதிகாரம் வருமான வரித்துறைக்கு உள்ளது.

சோதனை நடத்தும்போது துணை நிலை ராணுவத்தை பயன்படுத்தக் கூடாது என்று எந்த விதியும் இல்லை. பிற மாநிலங்களில் வருமான வரி சோதனை நடந்தபோது பல தடவை பாதுகாப்புக்காக துணை நிலை ராணுவம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ராம மோகன் ராவ் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் நான்கே நான்கு துணைநிலை ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். இதில் எந்த தவறும் இல்லை.

ராம மோகன் ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடத்துவதற்கான அனுமதி டெல்லியில் இருந்து கொடுக்கப்பட்டது. அந்த அனுமதியின் பேரில்தான் தலைமை செயலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.

வருமான வரித்துறை சோதனை நடத்துவது குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்கவோ, அனுமதி பெறவோ வேண்டிய அவசியம் இல்லை. சட்டப்படிதான் தலைமை செயலகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதுபோன்ற சோதனை நடந்த வருமான வரித்துறைக்கு முழு சுதந்திரம் உண்டு. அந்த நடைமுறைத்தான் பின்பற்றப்பட்டுள்ளது.

ராம மோகன் ராவ் வீட்டிலும் அவரது மகன் விவேக் வீட்டிலும் விதிமுறை மீறி சோதனை நடத்தப்படவில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் சோதனை நடத்தப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.