வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (16:52 IST)

விதிமீறல் கட்டிடங்கள்.! ஆழ்ந்த தூக்கத்தில் அதிகாரிகள் இருந்தனரா.? - நீதிமன்றம் கேள்வி

Madurai Court
மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி விதிமீறல் கட்டிடங்கள் மீது மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனரா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.  
 
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள கட்டிடங்களின் உயரத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகடந்த 1997-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
 
அதன்படி,  கோயிலின் சுவரில் இருந்து கோயிலைச் சுற்றியுள்ள கட்டிடங்களின் உயர வரம்பாக ஒன்பது மீட்டர் நிர்ணயம் செய்யப்பட்டது.  ஆனால்,  விதியை மீறி நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
 
இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் கடந்த 2011-ஆம் ஆண்டு பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.  அதில்,  பக்தர்கள் நீண்ட தூரத்தில் இருந்து கோயில் கோபுரங்களை பார்க்க முடியாததால்,  பக்தர்களின் உணர்வுகள் பாதிக்கப்படுவதாகவும்,  எனவே மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி உள்ள பகுதிகளில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த மனு மீது ஏற்கனவே பலமுறை விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள்,  அனுமதியற்ற விதிமீறல் கட்டிடங்களை கட்ட அனுமதி கொடுத்துவிட்டு 10 ஆண்டுகளாக ஆழ்ந்த தூக்கத்தில் அதிகாரிகள் இருந்தனரா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
 
விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் பணிகளில் ஒன்று என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் வெறும் நோட்டீசை மட்டும் அனுப்பிவிட்டு எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என்றும் இந்த வழக்கில் மதுரை மாநகராட்சியோடு உள்ளூர் திட்ட குழுமத்தையும் சேர்த்து எதிர்மனுதாரராக உத்தரவிடப்படுகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

 
இந்த வழக்கில் மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி கட்டிடங்கள் கட்ட 1997க்கு முன் மதுரை மாநகராட்சி நிர்வாகம் கொடுத்த அனுமதி எத்தனை? 1997க்கு பிறகு உள்ளூர் திட்ட குழுமம் கட்டிடங்கள் கட்ட கொடுத்த அனுமதி எத்தனை? தற்போது வரை விதிமீறல் கட்டிடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, விரிவான அறிக்கையை ஏப்ரல் 4ம் தேதிக்குள் சமர்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.