நிரந்தர தீர்வுக்கு நதிகளை இணைப்பதே வழி : விஜயகாந்த்
கர்நாடகாவிலிருந்து ஒவ்வொரு வருடமும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும் விவகாரம் போராட்டமாகி விட்ட நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் நாள்தோறும் 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு, கர்நாடக அரசு தண்ணீர் திறந்துள்ளது. ஒவ்வொரு வருடமும், இந்த மாதங்களில் கர்நாடகத்திடம் காவிரியில் தண்ணீர்விட போராடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் காவிரி நீர் தமிழக விவசாயிகளுக்கு கானல் நீராகவே மாறி விடும். இது இரு மாநில பிரச்னையாக இருப்பதால், யாரையும் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை தமிழக அரசு விரைந்து எடுக்க வேண்டும். விவசாயிகள் தங்கள் பிரச்னையை தொடர்ந்து வலியுறுத்தியும், தமிழக அரசு வாயே திறக்காமல் மவுனம் சாதிப்பது வேதனையளிக்கிறது.
அமைச்சர் கருப்பண்ணன் பொது கூட்டத்தில் பேசும்போது, தமிழக விவசாயிகள் கோடீஸ்வரர்களாக இருப்பதாக பேசி இருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல் உள்ளது. அமைச்சரின் பேச்சு மிகவும் கண்டனத்துக்குரியது. இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயம் தான். ஆனால் நமது விவசாயிகள் வறுமையிலும், கடனிலும், ஏழ்மையிலும் இருப்பது நமது நாட்டுக்கே தலைகுனிவு.
தமிழக விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வுகாண வரும் மழைக்காலத்திற்குள் அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாரி, வரமாக கடவுள் நமக்கும் தரும் மழையை சேமித்து விவசாயத்திற்கும், குடி தண்ணீருக்கும் அண்டை மாநிலத்திடம் கையேந்தும் நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் பிரச்னையை நாட்டின் முக்கிய பிரச்னையாக எடுத்துக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் நமது நதிகளை இணைப்பதன் மூலமே நிரந்தர தீர்வு ஏற்படும். மாநிலங்களுக்கிடையே இருக்கும் தண்ணீர் பிரச்னை, மாநிலங்களுக்கிடையேயான மக்கள் பிரச்னையாக மாறாமல் தடுக்கப்படவேண்டும்.
ஏற்கனவே குறுவை, சம்பா சாகுபடி பொய்த்து போன நிலையில், மாநிலங்கள் தண்ணீர் பிரச்னையை அரசியலாக்காமல் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்".
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.