புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 24 ஜூன் 2021 (08:31 IST)

லத்தியால் தாக்கியதில் வியாபாரி பலி... விஜயகாந்த் கண்டனம்!

சேலத்தில் போலீஸாரின் கொடூர செயலுக்கு டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். 

 
தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சோதனை சாவடிகள், மாவட்ட எல்லைகளில் போலீஸார் சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சோதனை சாவடியில் போலீஸார் சோதனை நடத்தியபோது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மளிகை வியாபாரி மது போதையில் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
 
இதனால் வியாபாரி மீது போலீஸார் லத்தியால் தாக்கியதில் பலத்த காயமடைந்த வியாபாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் போலீஸாரின் இந்த கொடூர செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். 
 
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, சேலம், ஆத்தூர், இடையப்பட்டியை சேர்ந்த வியாபாரி முருகேசனை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இது கண்டனத்துக்குரிய செயல். அவர் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். உயிரிழப்புக்கு காரணமான காவலர்களுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 
இதற்கு முன்னதாக உயிரிழந்த முருகேசன் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.