புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 மார்ச் 2021 (14:00 IST)

தேமுதிகதான் நம்ம ஜாதி.. கேப்டன்தான் கடவுள்.. சத்ரியனாக நேரம் வந்துவிட்டது – விஜய பிரபாகரன் முழக்கம்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகிய நிலையில் அதிமுகவை வீழ்த்த போவதாக விஜய பிரபாகரன் தேமுதிக கூட்டத்தில் பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தேமுதிக மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தேமுதிக கூட்டத்தில் பேசி வரும் விஜய பிரபாகரன் “தலையே போனாலும் தன்மானத்தை இழக்க மாட்டோம். தேமுதிகவிடம் 10,12 என தொகுதிகளுக்கு பேரம் பேசுகிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் கேப்டனுக்கு அதிமுக துரோகம் செய்தது. இந்த தேர்தலில் அதிமுகவுக்கு இறங்குமுகம்தான். பழனிசாமியை அவரது எடப்பாடி தொகுதியிலேயே தோற்கடிப்போம்” என பேசியுள்ளார்.

மேலும் “எனக்கு சாதி தெரியாது.. அப்படி பேசினால் நான் முட்டாளாகவே இருப்பேன். நமது ஒரே சாதி தேமுதிகதான். நமது ஒரே கடவுள் கேப்டன் விஜயாகாந்த்தான். இதுவரை சாணக்கியனாக இருந்தது போதும். இனி தேமுதிக சத்ரியனாக நேரம் வந்துவிட்டது. அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவை வீழ்த்துவோம்” என பேசியுள்ளார்.

இந்த திடீர் கூட்டணி முறிவும் அதை தொடர்ந்த தாக்குதல் பேச்சுகளும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.