அடுத்த பிரச்சாரம் இங்கதான்!. அந்த ஊரை டிக் அடித்த விஜய்!.. அனுமதி கிடைக்குமா?..
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் நடைபெற்றது. அதன்பின் மதுரையில் நடந்தது. இந்த இரண்டு பொதுக்கூட்டங்களிலுமே பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். அதன்பின் ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த விஜய் திட்டமிட்டார். திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு போன விஜய் கரூருக்கு சென்றபோது அவரைப் பார்க்க பலரும் கூடியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
எனவே மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்துவதை நிறுத்தினார் விஜய். தற்போது இது தொடர்பாக சிபிஐ விசாரணை செய்து வருகிறது. விரைவில் இது தொடர்பாக நீதிமன்றத்திலும் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்யவிருக்கிறது. கரூர் சம்பவத்திற்கு பின் ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார். தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜய் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் செல்ல திட்டமிட்டிருக்கிறார்.
அதன்படி வருகிற 13-ஆம் தேதி சேலம் மகுடஞ்சாவடியில் பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருக்கிறார். பிரச்சாரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடம் பற்றிய தகவல்களுடன் தவெக சார்பில் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது.
இதற்கு போலீசார் அனுமதி கொடுப்பார்களா இல்லையா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.