வேலூர்-சென்னை ரயில் தண்ணீர் இன்றுடன் நிறுத்தம்!
வேலூர் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டுவருவது இன்றுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இன்று காலை 8.30 மணிக்கு புறப்படும் 159வது ரயில் சேவையுடன் தண்ணீர் கொண்டு வரப்படுவது நிறுத்தப்படுவதாகவும் இதுவரை வேலூர் ஜோலார்ப்பேட்டையி இருந்து 159 ரயில்களில் 39 கோடியே 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் சென்னைக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கடுமையான குடிநீர்ப்பஞ்சம் ஏற்பட்ட நிலையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரயில்வே வேகன் மூலமாக கொண்டு வந்து தண்ணீர் வழங்க 65 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் அடிப்படையில் மேட்டூரிலிருந்து கூட்டு குடிநீர்த் திட்டக் குழாய் மூலம் பாலாற்றுக்கு வரும் நீரை, குழாய்கள் மூலம் ஜோலார்பேட்டைக்கு கொண்டு வந்து, அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது
இந்த நிலையில் தற்போது சென்னையில் நல்ல மழை பெய்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு போதுமான அளவில் இருப்பதால் இன்றுடன் வேலூரில் இருந்து சென்னைக்கு குடிநீர் ரயில்மூலம் கொண்டு வரப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது