1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 15 ஜூன் 2023 (15:24 IST)

மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் தப்பிக்க முடியாது: வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கைகள் கூறி இருப்பதாவது:
 
பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. 2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக, அப்போது எதிர்க் கட்சியாக இருந்த திமுக குற்றம்சாட்டியது. இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது.
 
இதே குற்றச்சாட்டுக்காக செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே வலியுறுத்தினார். மத்தியில் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை நடத்தி வரும் பாஜக அரசு, சட்டத்தின்படியே, அனைத்தையும் செய்து வருகிறது. அதன்படி தான், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், இதில் பழிவாங்கும் நடவடிக்கை என பழி சுமத்தி, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை திசை திருப்பும் முயற்சியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.
 
அதிமுகவில் இருந்தபோது ஊழல்வாதியாக இருந்த செந்தில் பாலாஜி, திமுகவில் சேர்ந்து அமைச்சரானதும் புனிதர் ஆகி விட்டாரா? திமுகவின் முதல் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால் செந்தில் பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா? செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்றால் அதனை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்புள்ளது. அதைவிடுத்து, ‘நாங்கள் என்ன வேண்டுமானாலும் அட்டூழியம் செய்வோம். நடவடிக்கை எடுக்கக் கூடாது. அப்படி நடவடிக்கை எடுத்தாலும் தடுப்போம்’ என்றால் அதனை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அனுமதிக்காது.
 
ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது என்பதை திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் உணர வேண்டும்’ இவ்வாறு வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva