தமிழ்த்தாய் மன்னிப்பாள்.. சட்டம் மன்னிக்குமா? – வைரமுத்து கண்டன ட்வீட்!
தமிழகத்தில் குடியரசு தின விழாவின்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு ஆர்பிஐ ஊழியர்கள் எழுந்து நிற்காதது குறித்து வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. சென்னையிலும் மெரீனா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டதுடன், அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் சென்னை ரிசர்வ் வங்கி அலுவலக ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செய்யாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து “தாய், தந்தை, ஆசானுக்கு எழுந்து நிற்பீர்களா? மாட்டீர்களா? அது சட்டமன்று; அறம். தமிழ்த்தாய் வாழ்த்தும் அப்படியே சட்டப்படியும் எழுந்து நிற்கலாம்; அறத்தின்படியும் எழுந்து நிற்கலாம். இரண்டையும் மறுத்தால் எப்படி? தமிழ்த்தாய் மன்னிப்பாள்; சட்டம்...?” என்று கூறியுள்ளார்.