வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 ஜூலை 2022 (12:35 IST)

வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு – வைகோ கண்டனம்!

என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, நெய்வேலியில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இயங்கி வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்தியாவில் உள்ள மற்ற பொதுத்துறை நிறுவனங்களை விட சிறப்பாக செயற்பட்டு 'நவரத்னா' தகுதியைப் பெற்று இருக்கின்றது. என்.எல்.சி. நிறுவனத்தை உருவாக்கிட பெருந்தலைவர் காமராஜர், இப்பகுதி மக்களிடம் நிலக்கரி சுரங்கம் அமைக்க நிலங்களை வழங்குமாறு கேட்டபோது, 30-க்கும் மேற்பட்ட ஊர் மக்கள் தங்கள் வாழ்விடங்களையும், நிலங்களையும் அளித்தனர்.

என்.எல்.சி. நிறுவனத்தில் தங்கள் நிலத்தையும், குடியிருந்த வீடுகளையும் தாரை வார்த்து தந்த மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று என்.எல்.சி. நிறுவனம், வேலை வாய்ப்புகளில் நேரடியாக வட இந்தியர்களை புகுத்தும் அடாத செயலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. என்.எல்.சி. நிறுவனத்தின் நிரந்தர பணி இடங்களில் 90 விழுக்காடு வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். இந்நிலையில்தான் தற்போது நூறு விழுக்காடு பணி இடங்களில் வட இந்திய இளைஞர்களை தேர்வு செய்து என்.எல்.சி. நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பட்டதாரி பொறியாளர்கள் 299 பேரை தேர்வு செய்து ஆகஸ்ட் 1-ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற் தகுதி தேர்வுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் தமிழ் நாட்டை சேர்ந்தவர் ஒருவர் கூட தேர்வு செய்யப்பட வில்லை. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் என்.எல்.சி. பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற தமிழ் இளைஞர்கள் ஒருவருக்குக் கூட தகுதி இல்லை என்று ஒன்றிய பாஜக அரசு முடிவு செய்துவிட்டதா? இது தமிழ் நாட்டிற்கு செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் ஆகாதா? எனவே புதியதாக அறிவிப்பு வெளியிட்டு தமிழ்நாட்டில் படித்த பட்டதாரி இளைஞர்கள் 90 விழுக்காடு என்.எல்.சி. நிறுவனத்தில் பணி வாய்ப்பு கிடைக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.