ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 17 ஏப்ரல் 2021 (08:47 IST)

தடுப்பூசி ஸ்டாக் இல்லாமல் மூடப்பட்ட தடுப்பூசி மையங்கள் !

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பல அரசு தடுப்பூசி மையங்கள் கடந்த சில நாட்களாக மூடப்பட்டன. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில வாரமாக வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் முன்னதாக தடுப்பூசி போட்டுக் கொள்ள அவ்வளவாக ஆர்வம் காட்டாத மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வருகை புரிய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பல மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் மொத்தம் 3,864 அரசு 931 தனியார் தடுப்பூசி மையங்கள் உள்ளது. இதுவரை தமிழகத்தில் சுமார் 45 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பல அரசு தடுப்பூசி மையங்கள் கடந்த சில நாட்களாக மூடப்பட்டன. தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
இதனிடையே தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளதால், அடுத்த 10 நாட்களுக்கு தட்டுப்பாடியின்றி தடுப்பூசிகள் கிடைக்கும் வகையில், 15 லட்சம் கோவிஷீல்டு மற்றும் 5 லட்சம் கோவேக்சின் என மொத்தம் 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.