1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (12:34 IST)

ஓசி-ல நோ ஊசி – பூஸ்டர் டோஸ் குறித்த புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் செப்டம்பர் மாதம் முழுவதும் தொடர்ச்சியாக வாரத்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு.


இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு அவசர கால அனுமதி வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி முதலாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ள நிலையில் சமீப காலமாக கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் வார இறுதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இன்றும் தடுப்பூசி முகாம் நடைபெறும் நிலையில் முதல், இரண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 18 வயதிற்கு அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுபோல இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்து 6 மாதங்களை கடந்தவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இந்த முகாம்களில் செலுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் இலவச பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் 30-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தித்தான் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். எனவே செப்டம்பர் மாதம் முழுவதும் தொடர்ச்சியாக வாரத்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என   அறிவித்துள்ளார்.