1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (16:04 IST)

நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் - சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு.!!

Mahavishnu
மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு காவல்துறை பதிலளிக்க சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணுவுக்கு எதிராக சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 7ம் தேதி கைது செய்தனர். 
 
இதை அடுத்து ஜாமீன் கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில் தான் பேசவில்லை எனவும், தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருக்கிறார். 
 
மேலும், தனது பேச்சு எடிட் செய்யப்பட்டு யூ டியூபில் வெளியிடப்பட்டதாகவும், முழு பேச்சை கேட்காமல், தனக்கு எதிராக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருக்கிறார். 

 
இந்த மனு முதலாவது கூடுதல் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை அக்டோபர் 3ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.