செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 ஜூலை 2020 (13:44 IST)

விவசாயிகளுக்கான உங்கள் குரல் ஒலிக்கட்டும்! – கார்த்திக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!

மத்திய அரசின் சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு வரைவு குறித்து நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையை உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

மத்திய அரசு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் கொண்டுவந்துள்ள புதிய வரைவு-2020 க்கு எதிராக சமூக ஆர்வலர்கள் பலர் குரல் எழுப்பி வருகின்றனர். இதனால் இயற்கை வளங்கள் அழியும் என அச்சம் நிலவுகிறது. அதேசமயம் பாஜகவினர் இதனால் பெரிய பாதிப்புகள் எதுவுமே இல்லை. விதிகளில் மட்டுமே சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. சிலர் தவறான தகவலை பரப்புகிறார்கள் எனவும் கூறி வருகின்றனர்.’

இந்நிலையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு குறித்து நடிகர் கார்த்தி நடத்தி வரும் உழவன் ஃபவுண்டேசன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த வரைவு ஆபத்தானதாக தோன்றுவதாகவும், மக்களின் கருத்தை கேட்ட பிறகு முடிவெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் கார்த்தியின் இந்த அறிக்கையை அவரது சகோதரரும், நடிகருமான சூர்யா வரவேற்றுள்ளார். இந்நிலையில் கார்த்தியின் அறிக்கை குறித்து பதிவிட்டுள்ள நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் “விவசாயிகளுக்கு எதிரான புதிய சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவை கண்டித்து திரையுலகிலிருந்து வெளிப்பட்டிருக்கும் நண்பர் கார்த்தி அவர்களின் குரல் போற்றத்தக்கது. உழவன் அமைப்பு மூலம் நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதோடு சமூக அக்கறைக்கான உங்கள் குரல் இதே துணிச்சலோடு தொடர்ந்து ஒலிக்கட்டும்” என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.