1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2020 (11:16 IST)

மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்த எடுபிடி அரசே... வம்பிழுக்கும் உதயநிதி!

அரியர் மாணவர்களின் தேர்ச்சி செல்லாது என்ற செய்தி குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடியாத காரணத்தால், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டாம் என்றும் அரியர் மாணவர்களும் பாஸ் எனவும் தமிழக அரசு அறிவித்தது. 
 
அரியர் மாணவர்களின் தேர்ச்சி செல்லாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் தெரிவித்ததாகவும், தமிழக அரசின் இதுகுறித்த முடிவை ஏற்க மறுப்பு எனவும் தகவல் வெளியானது. 
 
இந்த விவகாரம் குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார். அரியர்ஸ் மாணவர்கள் தேர்வு நடத்தி தேர்ச்சி வழங்க வேண்டும் என்பதே அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் விதி என்றும், அதனை மீறினால் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் கேள்விக்குறியாகும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில் இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தேர்வில்லாமல் தேர்ச்சியென அறிவிக்க முடியாது எனும் தன் கருத்தை AICTE கருத்தாக சூரப்பா திணிக்க பார்க்கிறார் என்கிறார் உயர்கல்வி அமைச்சர். கர்நாடக சூரப்பாவை அண்ணா பல்கலை துணைவேந்தராக மோடி திணித்தபோது மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருந்த எடுபிடி அரசே மாணவர்களின் குழப்ப நிலைக்கு காரணம். 
 
பல்கலை வளாகங்களை காவிமயமாக்க வேண்டாம் என தலைவர் ஸ்டாலின் அன்று கண்டித்தார். கமிஷனுக்கு பங்கம்வருமோ என அமைதியாக இருந்துவிட்டு இன்று தேர்தல் வந்ததும், அடிமை வாழ்விலிருந்து மீண்டதுபோல் நாடகமாடினால் நம்பிவிடுவோமா? நீங்கள் அடிமைகளே, கமிஷனுக்காக தமிழகத்தை அடகுவைத்த அடிமைகளே என பதிவிட்டுள்ளார்.