செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Updated : செவ்வாய், 9 டிசம்பர் 2025 (10:56 IST)

விதிமுறைகளை மீறி தவெக தொண்டர்கள் செய்த அட்டகாசம்.. விரட்டிப் பிடிக்கும் காவலர்கள்

vijay
கடுமையான நிபந்தனை:
 
கிட்டத்தட்ட 73 நாள்களுக்கு பிறகு தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக புதுச்சேரி செல்கிறார் விஜய். கரூரில் நடந்த சம்பவத்திற்கு பிறகு இன்றுதான் விஜய் புதுச்சேரிக்கு பிரச்சாரம் செய்ய இருக்கிறார். அதனால் புதுச்சேரி அரசு கடுமையான விதிமுறைகளை விதித்திருக்கிறது. முதலில் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதிக்காத அரசு அதன் பிறகு சில விதிமுறைகளை விதித்து அதன் படி பிரச்சாரத்தை நடத்த அனுமதி அளித்துள்ளது.
 
பிரச்சாரத்திற்காக இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டார் விஜய். அவருடைய தேர்தல் பிரச்சார வாகனம் நேற்று மாலையே புதுச்சேரிக்கு அனுப்பப்பட்டு விட்டது. இன்று காலை 10.30 மணியளவில் விஜய் பரப்புரை ஆற்ற இருக்கிறார். தொண்டர்கள் அமர இருக்கைகள் வைக்க அனுமதியளிக்கவில்லை. விஜயின் பரப்புரையை நின்றவாறே தொண்டர்கள் கேட்கவேண்டும்.
 
5000 பேருக்கு மட்டுமே அனுமதி:
 
QR கோடு வைத்திருக்கும் 5000 பேருக்கு மட்டுமே இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடும் நிபந்தனைகளுடன் புதுச்சேரியில் உள்ள உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக அங்குள்ள ஒரு தனியார் பள்ளிக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
கரூரில் நடந்த கோர சம்பவம்:
 
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் தேர்தல்  பிரச்சாரத்திற்கு சென்ற விஜயை பார்க்க அங்குள்ள மக்கள் ஏராளமான பேர் கூடினர். பிரச்சாரம் நடந்த இடம் மிகவும் குறுகிய இடம் என்பதால் கூட்ட நெருக்கடியில் சிக்கி தள்ளு முள்ளு ஏற்பட்டு பல பேர் மயக்கமடைந்தனர். அதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையுமே உலுக்கியது. இதுவரை உள்ள அரசியல் வரலாற்றில் இந்த மாதிரி சம்பவம் நடந்ததே இல்லை என்று பல பேர் கூறினார்கள்.
vijay























புதுச்சேரி மக்களை சந்திக்கும் விஜய்: 
 
அந்த சம்பவத்திற்கு பிறகு முதன் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தை நடத்த போகிறார் விஜய். அதனால் அங்குள்ள அரசு கடுமையான நிபந்தனைகளுடன் இந்த பொதுக்கூட்டத்தை நடத்த அனுமதி அளித்துள்ளது. எப்பவும் போல குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கலந்து கொள்ள கூடாது, சுவரில் ஏறவோ மரத்தில் ஏறவோ என எந்தவொரு அசம்பாவித செயல்களிலும் ஈடுபட கூடாது என அந்த நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஆனால் பொதுக்கூட்டத்தில் செல்ல QR code இல்லாததால் அங்குள்ள தடுப்புகளை தாண்டி எகிறி குதித்து , மரங்கள் சுவரில் ஏறி தவெக தொண்டர்கள் உள்ளே செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அவர்களை புதுச்சேரி காவலர்கள் விரட்டி பிடித்து வருகின்றனர். ட்ரோன் மூலம் கண்காணிப்பதை அறிந்த தவெக தொண்டர்கள் சில பேர் தங்கள் முகத்தை மறைத்து அருகில் இருக்கும் புதர்களிலும் ஒளிந்து கொண்டனர். இதனால் அங்கு ஒரே பரபரப்பு ஏற்பட்டது.