வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (08:03 IST)

இன்று துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி.. அமைச்சரவை மாற்றி அமைப்பு..!

udhayanidhi
தமிழ்நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதலமைச்சராக அதிகாரப்பூர்வமாக கவர்னர் மாளிகை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழகத்தின் அமைச்சரவை மாற்றப்பட்டதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 6 அமைச்சர்களின் பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இனி வனத்துறை அமைச்சராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மெய்யநாதன், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக கயல்விழி நியமிக்கப்பட்டுள்ளனர். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக மதிவேந்தன், கைத்தறி மற்றும் பால்வளத்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறையை தங்கம் தென்னரசு கவனிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஜாமீனில் வெளியான செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார், மேலும் அவரின் பொறுப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கோவி செழியன், ராஜேந்திரன், நாசர் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே. ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்ட கே. ராமச்சந்திரன், அரசு தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று மதியம் 3:30 மணிக்கு, கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva