வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 28 செப்டம்பர் 2024 (13:14 IST)

மூன்று பேர் வெளியே.? மூன்று பேர் உள்ளே.? தமிழக அமைச்சரவை நாளை மாற்றமா.?

assembly
தமிழக அமைச்சரவை மாற்றம் நாளை பிற்பகல் 3.30-க்கு அரங்கேற இருக்கிறது என்றும் மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக மூன்று பேர் அமைச்சர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்றும் மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
 
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் சமீபகாலமாக பரவி வருகிறது. தற்போது நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ள, செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் அமைச்சரவை மாற்றம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன், பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக அமைச்சரவை மாற்றம் நாளை பிற்பகல் 3.30-க்கு அரங்கேற இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக மூன்று பேர் அமைச்சராக இருக்கிறார்கள் என்றும் செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராவதில் ஆச்சரியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ஆனால் கடந்த ஐம்பதாண்டுகால வரலாற்றில் முதல் முறையாக உயர்கல்விக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார் என்று அவர் கூறியுள்ளார் நிஜமாகவே சமூக நீதியை வலுப்படுத்தும் ஏற்பாடு இது என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்தப் புரட்சிக்கு சமீப பத்தாண்டுகளில் வித்திட்டவர், மறைந்த ஜெயலலிதாதான் என்றும் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை பள்ளிக்கல்வி அமைச்சராக்கியவர் அவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
சிறுபான்மை சமூகத்தவர் கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் ஒருவர் போய் ஒருவர் வருகிறார் என்றும் பால் வளம் கைமாறுகிறது. சுற்றுச்சூழல் இன்னொருவருக்கு கூடுதலாகப் போகிறது என்றும் கூறியுள்ளார்.

 
 
நாளை நடைபெற உள்ள அமைச்சரவை மாற்றத்தின்போதே உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அறிவிப்பும் வர இருக்கிறது என்று மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.