புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (19:39 IST)

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

Senthil Balaji
471 நாட்கள் சிறைவாசம் முடித்து வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜியை வரவேற்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜி, கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 
 
இந்த வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் 12ம் தேதி முடிவடைந்த நிலையில், நேற்று செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து சென்னை புழல் சிறையில் இருந்து நேற்று வெளிவந்த செந்தில் பாலாஜிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
இந்நிலையில் அமைச்சர் உதயநிதியை செந்தில் பாலாஜி இன்று நேரில் சந்தித்து பேசினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி, பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில் பாலாஜி அவர்களுக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 
செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் என உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.