வேலூரில் இரண்டு கண்டெய்னர் லாரிகள் முழுக்க பணம் – ஆர்வமாக ஓடிவந்த பொதுமக்கள்
வேலூர் அருகே இரண்டு கண்டெய்னர் லாரிகள் முழுவதும் பணத்தோடு நின்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலால் பொதுமக்கள் அந்த இடத்தில் குவிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் மக்களவை தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த பகுதி வழியாக சென்னை நோக்கி இரண்டு கண்டெய்னர் லாரிகள் விரைந்து கொண்டிருந்திருக்கின்றன. அப்போது ஒரு தனியார் பேருந்து கண்டெய்னர் லாரி ஒன்றில் மோதி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கண்டெய்னர் லாரி ட்ரைவருக்கும், பேருந்து டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கண்டெய்னரில் அமர்ந்திருந்த ஆயுதம் தாங்கிய போலீஸ் ஒருவர் பேருந்து டிரைவரை அறைந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த தேர்தல் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கண்டெய்னரில் என்ன இருக்கிறது என்று அவர்கள் விசாரித்ததற்கு “கண்டெய்னர் முழுவதும் பணம் இருக்கிறது” என அவர் கூறியிருக்கிறார். இந்த செய்தி மக்களிடையே காட்டுத்தீ போல பரவ அந்த இடத்தில் மக்கள் குவிந்து விட்டனர்.
மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் வந்து விசாரணை மேற்கொண்டதில், அந்த பணம் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது தெரியவந்தது. ஆவணங்களை பரிசோதித்த பிறகு இரண்டு கண்டெய்னர் லாரிகளையும் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு கூடியிருந்த கூட்டத்தை போலீஸார் பேசி திருப்பி அனுப்பி வைத்தனர்.