வியாழன், 30 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ்
Last Updated: புதன், 8 பிப்ரவரி 2023 (19:46 IST)

''துருக்கி,சிரியா நில நடுக்கம்: உலகமே உறைந்துபோய் நிற்கிறது…''- சினோஜ் கவிதைகள்

TURKEY
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டுள்ள நில நடுக்கத்தில் சிக்கி பல ஆயிரம் பேர் பலியாகியுள்ள நிலையில், இந்த இயற்கை பேரழிவை ஒட்டி ஒரு கவிதை.

எத்தனையோ
சோதனைகளைத் தாண்டிச்
சாதனைச் சரித்திரம்
படைத்த மனித விஞ்ஞானத்திற்கு
இயற்கைச் சீற்றங்களைச்
சமாளிப்பதற்கான
ஆற்றல் இன்னும்
போதவில்லையா?
ஆறறிவில் யெழுப்பிய
கட்டிடங்களும்,
பல நூறாண்டுகள்
கம்பீரமாய் நின்ற
புராதனக் கோட்டைகளும்
சல்லி சல்லியாய்ப் போக,
நில நடுகத்தை
எதிர்கொள்ளத்
மனிதன் இன்னும்
முழுமையாய்த்
தயாராகவில்லையா?
ஓராண்டில் 5 லட்சம்
நில நடுக்கங்கள்
பூமியைத் தாக்கினால்
அதில்,1 லட்சம்
அதிர்வுகளை நம்மாள்
உணரமுடியுமாமே?
ஆனால்,
3 ரிக்டரில் தாக்கும்
பூமியதிர்ச்சியை
உணரமுடியாதபோது,
7 ரிக்டர் அளவிலான
நில நடுக்கம்
பூமியைத் துண்டாக்கிடுமாம்!
இன்று,
துருக்கியிலும், சிரியாவிலும்
உண்டான நிலநடுக்கமோ
உலகைப்
பேரதிர்ச்சியில்
உறையவைத்துள்ளது.
இந்த நில நடுக்கம்
பூமித் தட்டுகளைப்
பதம்பார்த்து
பாளம்பாளமாய்
வெடிக்கச் செய்துள்ளது;
மனித இன
இதயங்களையும் தான்!
தொப்புட்கொடி அறுக்காத
பச்சிளம் குழந்தை முதல்,
தள்ளாடும் முதியவர்கள் வரை
சுமார் 9 ஆயிரம் பேருக்கு
கட்டிட இடிபாடுகளுக்குள்
உயிருடன்
சமாதி கட்டியுள்ளது.
ஓர் இயற்கையின்
திருவிளையாடலைப் பார்த்து,
பல மொழிகளில்
ரசித்து வந்த நாம்.
இன்று, உயிர்தப்பிக்க வேண்டி,
அதன் உக்கிரதாண்டவத்தைத்
கண்டு விம்மி நிற்கிறோம்!
பூமிக்கடியில்
உண்டாகும் ஓரழுத்தம்
அதிகமாகி, அதன் மூலம்
ஆற்றல் வெளியேறினால்
பூமித்தட்டுகள் நகர்ந்து
நில அதிர்வுகள் தோன்றும்,
இதில்,
கண்டங்கள் சில
செமீட்டர் வரை
பெரும் தடயங்களை
ஏற்படுத்தி
நகந்துபோகும்!
இப்போது,
ஐரோப்பாவுக்கும்,
ஆசியாவுக்கும்
இடைப்பட்ட
துருக்கியில்
உண்டான நில நடுக்கமோ
ஒட்டுமொத்த
மானுடத்தின்
குரல் வலையையே
நடுங்கச் செய்துள்ளது!...
நம் தலையசைவு போல்
இப்பூமியின் அசைவு
ஒன்றும் லேசானதல்ல என்று
அவ்வப்போது,
நில நடுக்க மானியில்
பதிவாகும் 7 ரிக்டர் அளவுக்கு
மேலான பதிவு
மெய்ப்பிக்கிறது.
 
பூமி ஒரு சில நொடிகளுக்குக்
குலுகியதற்கே
மனித நாகரீகத்தை
500 ஆண்டுகளுக்குப்
பின்னால் கொண்டு
சென்ற இயற்கை மீது
சினம் கொள்வதா?
இல்லை,
இத்தனை காலம்
அதன் இடுப்பில் வைத்து
மனித நாகரீகத்தைத்
தூக்கிச் சுமந்த
அதன் மேன்மையைப்
போற்றுவதா?
turkey
உயிர்களின் இழப்பை
மட்டும் ஈடுசெய்ய
முடியுமென்றால்
இயற்கைக்கும்
மனிதனுக்கு வரும்
மேல் மூச்சு,
கீழ்மூச்சு மாதிரி
இப்பூமிக்கும்
சாதா அசைவு
மேற்தள்ளல் அசைவு மற்றும்
சமமாந்தர அசைவு
தேவையானவை தான்!
அதில்லாவிடில்,
இயற்கைக்கு அது
தேவையில்லாத ஒன்று தான்!
என்னவிருந்தாலும்,
இயற்கைக்கு ஆட்பட்டவர்களாகிய
நாம் இதை ஏற்கத்தான்
ஆக வேண்டும்!
இல்லையென்றால்,
இந்நில நடுக்கத்தில் இருந்து
முன் கூட்டியே தப்பிக்க
நவீன விஞ்ஞானத்தைத்
துணைக்கழைத்து
மனிதவுயிர்ப் பாதுகாப்பைப்
பூமியில் உறுதி
செய்யவேண்டும்!
மீண்டும் இதுபோல்
உலகப் பேரிழப்புகள்
நிகலாமலிருக்க...
அதொன்றுதான்
ஒரே வழி!