1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 25 அக்டோபர் 2018 (15:38 IST)

18 எம்.ஏல்.ஏக்களும் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது - அதிர்ச்சி தகவல்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் இன்னும் 5 வருடங்களுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது என முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

 
இந்த வழக்கில் தினகரன் தரப்பிற்கு சாதகமாக தீர்ப்பு வெளியானால், ஆட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்பதால், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பீதியிலேயே இருந்து வந்தது. ஆனால், தற்போது தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாகவே வந்துவிட்டதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
தற்போது தினகரன் தரப்பினருக்கு 2 வாய்ப்புகள்தான் இருக்கிறது. ஒன்று உச்ச நீதிமன்றத்தை நாடுவது அல்லது இடைத்தேர்தலை சந்திப்பது என செய்திகள் வெளியாகி வருகிறது. இதுபற்றி ஆலோசனை செய்து முடிவெடுப்போம் என தினகரனும் கூறியுள்ளார்.

 
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் மேயர் சைதை துரைசாமி “தகுதி நீக்கம் செல்லும் என நீதிபதி கூறிவிட்டதால், இன்னும் 5 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிடும் உரிமையை 18 எம்.எல்.ஏக்கள் இழந்துவிட்டார்கள். இந்த தீர்ப்பின் சாரம்சமே அதுதான். எனவே, இடைத்தேர்தல் மட்டுமல்ல 5 வருடங்களுக்கு எந்த தேர்தலிலும் இந்த 18 எம்.எல்.ஏக்களும் போட்டியிட முடியாது. ஒரு சிறிய குழு தனியாக பிரிந்து ஆட்சியை கவிழ்த்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் கட்சி தாவல் தடை சட்டமே கொண்டு வரப்பட்டது. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பிரிந்து சென்றால்தான் அது பிளவாக கருதப்படும்” என தெரிவித்துள்ளார்.
 
மேலும், தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை. ஆனால், அதிலும் தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வருவதற்கு வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார். இது தினகரன் ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஆனால், சைதை துரைசாமி ஒன்றும் வழக்கறிஞர் அல்ல. எப்போது இடைத்தேர்தல் அறிவித்தாலும், நாங்கள் போட்டியிடுவோம் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஒருபுறம் பேட்டி கொடுத்து வருகின்றனர்.