ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 ஜூலை 2024 (17:35 IST)

மீண்டும் ஒரு கள்ளச்சாராய சம்பவம்.. கள்ளக்குறிச்சியில் இருந்து பாடம் கற்கவில்லையா? டிடிவி தினகரன்..!

TTV Dinakaran
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட சாராயத்தை குடித்த 7 பேர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கள்ளக்குறிச்சி சம்பவத்திலிருந்து இன்னும் தமிழக அரசு பாடம் கற்கவில்லையா என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பூரிகுடிசை எனும் கிராமத்தில் புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட சாராயத்தை அருந்தியவர்களில் 7 பேர் உடல்நலக்குறைவு காரணமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடு மறைவதற்குள்ளாகவே,  புதுச்சேரி மலிவு விலை சாராயத்தை அருந்தியவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதன் மூலம் சாராய விற்பனையை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ தமிழக அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. 
 
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த டி.குமாரமங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இதே புதுச்சேரி சாராயத்தை அருந்தி உயிரிழந்ததாக வந்த செய்தியை மூடி மறைக்க முயன்ற திமுக அரசு, அதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இன்று மேலும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 
 
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து  கொண்டு வரும் நிலையில், அடுத்தடுத்து நடைபெறும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் திமுக அரசின் மக்கள் மீதான அக்கறையின்மையையும், காவல்துறையின் பொறுப்பற்றத் தன்மையையுமே வெளிப்படுத்துகின்றன. 
 
எனவே, இனியும் இது போன்று அலட்சியப் போக்குடன் செயல்படாமல் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்படும் சாராயத்தை தடுக்க எல்லைக் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு,  உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். 
 
Edited by Mahendran