செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 அக்டோபர் 2018 (13:57 IST)

செல்லாது...செல்லாது..மேல் முறையீடு போறோம் - தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வெளிவந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவெடுத்திருப்பதாக தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியளித்துள்ளார்.

 
தமிழக அரசியலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. சபாநாயகர் தனபால் எடுத்த நடவடிக்கை தவறில்லை என கூறி 18 எம்.எல்.ஏக்களின் மனு தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். 
 
இதனால் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை இழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, நேற்று மாலை எம்.எல்.ஏக்களை சந்திப்பதற்காக தினகரன் மதுரை கிளம்பி சென்றார். அங்கு ஒரு விடுதியில், நேற்றும், இன்றும் எம்.எல்.ஏக்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். 
 
இந்நிலையில், தற்போது மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன் “ இந்த தீர்ப்பில் பல குறைகள் இருப்பதாக எங்கள் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். சட்டப்பேரவைத் தலைவர் செய்தது தவறு என உலகம் அறிய வேண்டும் என்பதற்காகவே மேல் முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளோம். அதேநேரம், இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவோம். அதிகாரங்களை வைத்து அரசு எங்களை தொடர்ந்து தண்டித்து வருவதாக கருதுகிறோம்” என அவர் தெரிவித்தார்.
 
மேலும், தேர்தலில் நாங்கள் போட்டியிடுவதற்கு எங்களுக்கு தடையுமில்லை என வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே, வழக்கு நடக்கும்போது இடைத்தேர்தல் வந்தாலும் போட்டியிடுவோம்.” என அவர் தெரிவித்தார்.