செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (12:22 IST)

நள்ளிரவில் திடீர் மின்தடை; திமுக வந்தாலே பவர் கட்தான்…! – எதிர்கட்சிகள் விமர்சனம்!

சென்னையில் எந்தெந்த பகுதிகளில் கரண்ட் இல்லை?
நேற்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது குறித்து டிடிவி தினகரன் திமுகவை விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் முதலாக திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில காலமாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார்கள் அதிகரித்துள்ளன.

நள்ளிரவில் திடீர் மின்தடை:

கடந்த 2008ம் ஆண்டில் திமுக ஆட்சியில் இருந்தபோது தினம்தோறும் மின்தடை ஏற்பட்டு மக்கள் பலர் வெகுவாக பாதிக்கப்பட்டனர். 2011 தேர்தலில் திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக தொடர் மின்வெட்டும் கூட சொல்லப்பட்டது. இந்நிலையில் மீண்டும் திமுக ஆட்சியில் மின்தடை ஏற்படுவது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று நள்ளிரவு திடீரென தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து மக்கள் சமூக வலைதளங்களிலும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

செந்தில் பாலாஜி விளக்கம்:

நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட இந்த திடீர் மின்தடை குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி “இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது.

Senthil Balaji

இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார். எனினும் இந்த மின்தடை விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகியுள்ளது.

எதிர்கட்சிகள் விமர்சனம்:


இந்நிலையில் நள்ளிரவில் ஏற்பட்ட மின்தடை குறித்து எதிர்கட்சி பிரமுகர்களும் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் “திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு ஏற்படும். அது தான் கடந்தகால வரலாறு. தலைமை மாறினாலும் நிலைமை மாறவில்லை. மாபெரும் தோல்வியை திமுக அரசு சந்தித்து உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.