நக்கீரன் கோபால் கைதை வரவேற்கிறேன்; டிடிவி தினகரன்
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிர்மலா தேவி விவகாரம் குறித்து இந்த வார நக்கீரனில் சிறப்பு கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. இந்த கட்டுரையில் ஆளுனர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறப்பட்டுள்ளதை அடுத்து ஆளுனர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்று காலை நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார்
நக்கீரன் கோபால் கைது கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட ஒருசில அரசியல்வாதிகள் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நக்கீரன் கோபால் கைதை வரவேற்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தினகரன்.இதுகுறித்து மேலும் கூறியபோது, ' எந்தவித ஆதாரமில்லாமல் தனி நபர்கள் மீது அவதூறாக செய்திகளை வெளியிடுவது தவறு என்று கூறியுள்ளார்.
நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், ஆனால் பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசவும் பேச்சுரிமை பற்றி கேள்வி கேட்கவும் திமுகவுக்கு தகுதியில்லை என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
முன்னதாக நக்கீரன் கோபால் கைது குறித்து கருத்து கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'தமிழக அரசும், ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தும் தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை அமல்படுத்தி பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.