திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (10:47 IST)

நக்கீரன் கோபால் கைது –காரணம் என்ன?

இன்று அதிகாலை சென்னை விமானநிலையத்தில் வைத்து நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இன்று அதிகாலை சென்னையிலிருந்து புனே செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நக்கீரன் கோபாலை விமான நிலைய காவல் உதவி ஆணையர் கைது செய்துள்ளார். விமான நிலையத்தில் வைத்து ஒரு மணிநேரம் வரை விசாரித்து பின்பு அடையாறு சரக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அடையாறு காவல்நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட கோபால் பின்பு அங்கிருந்து சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். கோபாலின் கைதுக்குக் காரணம் சென்னை ஆளுநர் மாளிகையில் இருந்து புகார்தான் எனக் கூறப்படுகிறது.

மாணவிகளிடம் பாலியல் ரீதியாகப் பேசிய வழக்கில் சிக்கி சிறையிலுள்ள பேராசிரியை நிர்மலா தேவி குறித்து நக்கீரன் பத்திரிக்கை தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்ததாகவும் அதில் ஆளுநருக்கும் சம்மந்தம் இருப்பது போல செய்திகள் வெளியிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்தக் கட்டுரைகள் ஆளுநர் மீது அவதூறு பரப்பும் வகையிலும் ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும் உள்ளதால் ஆளுநர் தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்ப்ட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நக்கீரன் கோபால் சட்டப்பிரிவு 124 ஏ-ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.