வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2019 (15:50 IST)

சைக்கிளில் சென்ற ஹெல்மெட் போடாத மாணவனை போலீஸ் பிடித்ததா?? உண்மை பின்னணி என்ன?

சைக்கிளில் சென்ற மாணவன் ஹெல்மெட் போடவில்லை என்பதால் போலீஸார் சைக்கிளை கைப்பற்றியதாக பரவிய செய்தியின் உண்மை தன்மை தற்போது வெளிவந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், ஹெல்மெட் போடாமல் சைக்கிளில் சென்றதால்,  ஒரு மாணவனின் சைக்கிளை கைப்பற்றினர் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது.

இந்நிலையில் இந்த செய்தியின் உண்மை தன்மை தற்போது தெரியவந்துள்ளது. அதாவது போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 7 ஆம் வகுப்பு மாணவன், அந்த சாலையில் தனது சைக்கிளிலிருந்து கைகளை விட்டு ஓட்டியபடி அடிக்கடி சென்றுள்ளான். ஆதலால் தான் அவனது சைக்கிளை போலீஸார் கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஏரியூர் இன்ஸ்பெக்டர் பாபு, கைகளை விட்டபடி சைக்கிள் ஓட்டியதால் மாணவனின் பாதுகாப்பு கருதியும் அந்த மாணவனுக்கு எச்சரிக்கை தருவதற்காகவும் சப் இன்ஸ்பெக்டர், மாணவனின் சைக்கிளை பிடித்து வைத்திருந்ததாகவும், பின்பு அரை மணி நேரம் கழித்து அனுப்பி வைக்கப்பட்டார் என்றும் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சைக்கிளில் ஹெல்மெட் போடாமல் சென்ற மாணவரின் சைக்கிளை கைப்பற்றிய செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.