1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2019 (16:08 IST)

35 லட்சம் மதிப்பில் ரஜினியின் பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டிய ரசிகர்!

திருச்சி ரஜினி மக்கள் மன்ற ரசிகர் ஒருவர் ரஜினியின் அப்பா, அம்மாவுக்கு கட்டிய மணிமண்டபத்தை ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் நேற்று திறந்து வைத்துள்ளார்.
 

 
பெரும்பாலும் திரைப்பட நடிகர்களுக்குக் கோயில் கட்டி வணங்குவதில் திருச்சி ரசிகர்களை மிஞ்ச ஆளேயில்லை. கடந்த சிலவருடங்களுக்கு முன்பு, நடிகை குஷ்புவுக்கு திருச்சியில் அவரது ரசிகர்கள் கோயில் கட்டியது பரபரப்பாக பேசப்பட்டது. அந்தவகையில் தற்போது  திருச்சி ரசிகர் ஸ்டாலின் புஷ்பராஜ் எனபர் ரஜினியின் பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டி அசத்தியுள்ளார்.
 
ரஜினியின் தீவிர ரசிகரான இவர், ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்துவருகிறார். இவருக்கு சின்னவயதில் இருந்தே, ரஜினிகாந்த்தைப் பிடிக்குமாம். அந்தவகையில் ரஜினியின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், கடந்த 2011-ம் ஆண்டு ரஜினி உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றபோது, அவர் பூரண குணமடைய, அவரது ரசிகர்கள், அலகு குத்துதல், அக்னிச் சட்டி எடுத்தல், பால்குடம் தூக்கியது என பல வகையான வேண்டுதல்களைச் செய்தனர். அந்தவகையில் அப்போது ரஜினியின் உடல்நலன் பெற நினைத்த, ஸ்டாலின் புஸ்பராஜ், தலைவர் ரஜினியின் உடல் சரியானால், அவரது பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டுவதாக வேண்டினாராம். 
 
இதையடுத்து, திருச்சி கே.கே.நகரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள குமாரமங்கலம் கிராமத்தில் 1,860 சதுர அடி பரப்பளவில் ரஜினியின் தாய் சௌ.ராம்பாய், தந்தை ரானோஜிராவ் ஆகியோருக்கு 35 லட்சம் மதிப்பில் தன் சொந்த செலவில் மணிமண்டபம் கட்டியுள்ளார். இதில் ரஜினியின் பெற்றோரின் மார்பளவு வெண்கல சிலைகள், இரண்டரை அடி உயர சிவலிங்கம் ஆகியவை உள்ளன.இதனை  ரஜினியின் மூத்த சகோதரர் சத்ய நாராயண ராவ் நேற்று திறந்து வைத்தார். 
 
இவ்விழாவில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட தலைவர் கலீல், மாவட்ட துணைச் செயலாளர் ராயல்ராஜூ ஆகியோர் சகிதமாக ரஜினிகாந்த் சார்பாக அவரது அண்ணன் சத்தியநாராயணராவ் கெய்க்வாட் மற்றும் சந்திரகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு திறந்துவைத்தனர். நிகழ்ச்சியைக் காண ஏராளமான ரஜினி ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.