குரு பிறந்த நாள் – அஞ்சலி செலுத்த பாமகவுக்கு தடை !
பாமக தலைவர்களில் முக்கியமானவரும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குருவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்த பாமக வுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நுரையீரல் திசுப்பை நோய்க் காரணாமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, சிகிச்சைப் பலனளிக்காமல், கடந்த ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி காலமானார். குரு மறைந்த அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அவரது குடும்பத்திற்குள் பல பிரச்சினைகள் ஏற்பட்டன.
இந்த நிலையில் குருவின் மகள் விருதாம்பிகை, தனது அத்தை மகன் மனோஜை கடந்த நவம்பர் 28ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணத்தில் கலந்துகொண்ட குருவின் மகன் கனலரசன் மற்றும் குருவின் சகோதரிகள், பாமக தலைமை மீது கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். இதனால் பாமக வில் விரிசல் எழுந்துள்ளதாக அப்போதுக் கூறப்பட்டது. மேலும் குரு குடும்பத்தினர் பாமக வை விட்டு விலகப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து நாளை மறுநாள் மறைந்த குருவின் பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட இருக்கிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த குருவின் குடும்பத்தினரைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை உடையார்பாளையம் கோட்டாட்சியர் அறிவித்துள்ளார். பாமக கட்சி நிர்வாகிகளுக்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 1 காலை 9 மணி முதல் 10 மணி வரை அவரது குடும்பத்தினர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்த இருக்கின்றனர்.
இதனால் பாமக தலைமைக்கும் குரு குடும்பத்திற்கும் உள்ள இடையே மனக்கசப்புகள் இன்னும் அப்படியே உள்ளதாகவும் இந்த பிறந்தநாளை முன்னிட்டு குருவின் குடும்பத்தோடு சமாதானப் பேச்சுகளைத் தொடங்கலாம் என்றிருந்த பாமக வின் ஆசை நிறைவேறாது போனதாகவும் கூறப்படுகிறது.