இயற்கை உபாதைக்கு சென்ற குழந்தைகள் மாயம்! – சடலமாக மீட்கப்பட்ட சோகம்!
திருச்சி சமயபுரம் அருகே இயற்கை உபாதையை கழிக்க சென்ற குழந்தைகள் 12 மணி நேர தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி, சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ரவிசந்திரன். இவரது மனைவி அனிதா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு தர்ஷினி என்ற 6 வயது பெண் குழந்தையும், நரேன் என்ற 4 வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.
பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிடும் நிலையில் இரு குழந்தைகளையும் ரவிசந்திரனின் தாய் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இயற்கை உபாதைக்காக பெருவளை வாய்க்கால் கரையோரம் சென்ற இரு குழந்தைகளும் நீண்ட நேரமாகியும் திரும்ப வராததால் குழந்தைகளின் பாட்டி வாய்க்காலுக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு குழந்தைகளின் காலணி மட்டும் கிடந்துள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில், சம்பவ இடம் விரைந்த உதவி ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவித்து வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரவு முழுவதும் குழந்தைகள் தொடர்ந்து தேடப்பட்டு வந்தனர். அதிகாலை வேளையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இரண்டு குழந்தைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.