எல்லாருக்கும் தீபாவளி.. ஆனா எங்களுக்கு மட்டும்..! – சோகத்தில் தூத்துக்குடி, திருச்சி மக்கள்!
தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ள சூழலில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவால் தூத்துக்குடி, திருச்சி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டத்திற்காக மக்கள் கன ஜோராய் தயாராகி வரும் நிலையில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களில் பசுமை பட்டாசுகள் தவிர ஏனைய பட்டாசுகளை விற்க, வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நவம்பர் 30 வரை முழுவதுமாக பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
இதுதவிர தமிழகத்தில் திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட அதிக காற்று மாசுபாடு உள்ளதாக வரையறுக்கப்பட்டுள்ள இந்தியாவின் 122 நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நகரங்களில் Poor தகுதியில் உள்ள நகரங்களை தவிர்த்து மற்ற நகரங்களில் பசுமை பட்டாசுகள் வெடிக்கவும், அதுவும் அரசு வரையறுத்துள்ள 2 மணி நேரத்திற்கு உள்ளாகவே வெடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உரிய உத்தரவுகளை காவல்துறை டிஜிபி, தலைமைசெயலக செயலர்கள் ஆகியோர் பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ள நிலையில், பட்டாசுகள் இல்லாத தீபாவளியை கொண்டாட வேண்டிய நிலையில் திருச்சி, தூத்துக்குடி மக்கள் உள்ளனர். மற்ற மாவட்டங்கள் பட்டாசுகளுடன் தீபாவளியை கொண்டாட உள்ள நிலையில் இந்த உத்தரவு கட்டுப்பாட்டு பகுதி மக்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.