வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 நவம்பர் 2020 (09:34 IST)

துரைக்கண்ணு மரணத்தில் மர்மம்? ஊழலில் அதிமுக? – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு அதிகளவில் சொத்து சேர்த்ததாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்த துரைக்கண்ணு கடந்த அக்டோபர் 31 அன்று மூச்சு திணறல் மற்றும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது இழப்பிற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணு தனது பினாமிகள் பெயரில் 2,500 கோடி சொத்து சேர்த்து வைத்திருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக பிரமுகர் ஒருவரே வருமான வரித்துறைக்கு கடந்த பிப்ரவரி மாதமே கடிதம் எழுதியதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து குற்றம் சாட்டியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக தலைமை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் பெரிய அளவிலான தொகையை கொடுத்து வைத்திருந்ததாகவும், அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையிலும் அந்த தொகை குறித்து அமைச்சரின் குடும்பத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி பணத்திற்கு உத்தரவாதம் கிடைத்த பிறகே மரணத்தை அறிவித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமைச்சர் குடும்பத்திடம் அளிக்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.300 கோடி முதல் ரூ.800 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுவதாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின், இதுகுறித்து தேர்தல் ஆணையம், வருமான வரித்துறையினர் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் இவ்வாறான ஊழல் புகார் எழுந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.