தமிழகத்தில் வேலைநிறுத்தம்: 67% பேருந்துகள் இயங்கவில்லை - பயணிகள் தவிப்பு!
தமிழகத்தில் வேலைநிறுத்தம் காரணமாக 67% பேருந்துகள் இயங்கவில்லை என போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கு, தனியார் மயம் உட்பட பல்வேறு விவகாரங்களை கண்டித்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றன. சென்னையில் போக்குவரத்துத் துறையின் சிஐடியுசி, தொமுச உள்ளிட்ட 11 தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளது. 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டு வரும் நிலையில் பணிமனைகளில் பேருந்துகளை இயக்க ஊழியர்கள் முன்வரவில்லை.
பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் ஷேர் ஆட்டோ, மெட்ரோ போன்றவைகளில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் வேலைநிறுத்தம் காரணமாக 67% பேருந்துகள் இயங்கவில்லை என போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி இயங்க வேண்டிய 15,335 பேருந்துகளில் 5,023 பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சுமார் 3,500 பேருந்துகள் இயங்கவில்லை என கூறப்படுகிறது. அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பேருந்துகள் இயக்குவதால் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் குறைந்த அளவே பேருந்துகள் ஓடுகின்றன.