இனிமே வண்டியே எடுக்க மாட்டேன்! பெட்ரோல் விலையால் அதிர்ந்த மக்கள்!
நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் கோரோனா பாதிப்பினால் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ள நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோலுக்கான வரி 28லிருந்து 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரி 20லிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மே 4 முதல் அமலுக்கு வந்த இந்த வரி உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரத் தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 காசுகள் அதிகரித்து ரூ.80 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 48 காசுகள் உயர்ந்து 73.17 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பெட்ரோல் விலை 80 ஐ தொட்டுள்ளது. ஆனால் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலையால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் விலை அதிகரிப்பது ஏன் என புரியாமல் மக்கள் குழம்பியுள்ளனர்.