1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 ஜூன் 2020 (12:20 IST)

அரசு பேருந்து வாடகைக்கு கிடைக்கும்..! போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் பல மண்டலங்களில் பேருந்து சேவைகள் தொடங்கியுள்ள நிலையில் தேவைப்பட்டால் அரசு பேருந்துகளை வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தின் ஆறு மண்டலங்களில் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது.

பல மாவட்டங்களில் அரசு பேருந்துகள் வழக்கம்போல இயங்க தொடங்கியிருக்கும் நிலையில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. அதேசமயம் அதிகமான பயணிகள் இல்லாத சூழலில் தனியார் பேருந்து சேவைகள் பல நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிறைய மக்கள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டிய தேவை இருக்கும் பட்சத்தில் அரசு பேருந்துகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

என்ன காரணத்திற்காக பேருந்து தேவைப்படுகிறது, இ-பாஸ் அனுமதி உள்ளதா உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்த பின்னர் பேருந்துகள் வழங்கப்படும் என்றும், மலைப்பகுதிகளில் கிலோமீட்டருக்கு 55 ரூபாயும், தரைப்பகுதிகளில் கிலோமீட்டருக்கு 45 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.