1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (08:47 IST)

ஒரே பெயரில் பல மின் இணைப்புகள்; மின்சார வாரியத்துக்கே விபூதி! – ஆய்வு செய்ய உத்தரவு!

தமிழகத்தில் வீடுகள், தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் முறைகேடாக மின் இணைப்புகள் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழகம் முழுவதும் பல வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஒரேயொரு மின் இணைப்பை பெற்று அதை முறைகேடாக பல இணைப்புகளாக மாற்றி பயன்படுத்துவது போன்றவை அதிகரித்துள்ளதால் மின்சார வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் அந்தந்த மின்பகிர்மான வட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இணைப்புகள் முறையாக உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பொது சேவை மின்சார இணைப்புகள் மற்றும் பிறசேவைக்கான மின்சார இணைப்புகளை கண்டறிய வேண்டும். மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள அனைத்து விதிமுறைகளையும் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.

பல இணைப்புகளை பெற்று முறையற்ற முறையில் பயன்படுத்தும் மின்நுகர்வோருக்கு நோட்டீஸ் அனுப்பி 3 மாத கால அவகாசம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.