செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2018 (13:44 IST)

தொடரும் போராட்டம் : பொங்கல் விடுமுறைக்கு செல்பவர்கள் கதி என்ன?

தமிழக போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடர்வதால், பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக பணிக்கு செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  
 
போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையேல் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் எச்சரித்தும் 5 நாளாக இன்று போராட்டம் தொடர்கிறது.
 
போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையேல் நோட்டீஸ் அனுப்பிவிட்டு ஊழியர்களை பணி நீக்கம் செய்யலாம் என இன்று மீண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
ஆனால், இந்த பிரச்சனையில் முதல்வர் தலையிட வேண்டும். நாங்கள் ஸ்டிரைக் செய்யவில்லை. அமைச்சர்தான் ஸ்டிரைக் செய்கிறார்.  தற்காலிக ஓட்டுனர்களை நியமித்து பொதுமக்கள் உயிருடன் அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது. நியாயம் கிடைக்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். தொழிலாளர்களின் பணம் ரூ.7 ஆயிரம் கோடியை அரசு செலவு செய்து விட்டது. அந்த பணத்தை கொடுப்பதற்குள் எத்தனை பேர் உயிரோடு இருப்பார்கள் எனத் தெரியவில்லை. ஏற்கனவே பலர் ஓய்வூதியம் மற்றும் பணித்தொகை ஆகியவற்றை பெறாமலேயே இறந்துவிட்டனர். எங்கள் கோரிக்கை அரசு ஏற்கும் வரை எத்தனை நாட்கள் ஆனாலும் போராட்டத்தை கை விட மாட்டோம் என ஊழியர் சங்கங்கள் கூறியுள்ளன.
 
இதனால், வருகிற 13ம் தேதி பொங்கல் பண்டிகை தொடங்குகிறது. சென்னையில் பணிபுரியும் லட்சக்கணக்கானோர் வருகிற 12ம் தேதி தங்களின் சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் அவர்கள் எப்படி செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
தற்காலிக ஓட்டுனர்கள் நியமிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், குறைந்த பேருந்துகளே இயக்கப்படும். மேலும், அனுபவின்மையால் அந்த ஓட்டுனர்கள் விபத்துகளை ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே, பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஒரு பக்கம் ரயிலிலும் ஏற்கனவே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. 
 
எனவே, பொங்கலுக்கு முன்பாக இந்த பிரச்சனைக்கு அரசு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கருதுகிறார்கள்.