வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (11:55 IST)

விநாயகர் சதுா்த்தி விழா.. தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட விதிமுறைகள்

செப்டம்பர் 7ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி, மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும்.

சிலைகள் தயாரிக்க பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருள்களை பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம்.

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் மற்றும் எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய , நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளை அழகுபடுத்தவும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்”


Edited by Siva