1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2019 (19:40 IST)

24 மணி நேரமும் திரையரங்குகள் இயங்கும்: டாஸ்மாக்கும் உண்டா?

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், தொழிற்சாலைகள், மால்கள் திறந்து வைக்க அனுமதித்து நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 24 மணி நேரமும் திரையரங்குகள் இயங்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே இனி அதிகாலை காட்சிக்காக ரசிகர்கள் காத்திருக்காமல் நள்ளிரவு காட்சியையும் பார்த்து கொள்ளலாம். 
 
பல வருடங்களுக்கு முன் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மட்டுமே நடுநிசிக்காட்சி அனுமதிக்கப்படும். அதன்பின்னர் பெரிய ஸ்டார்களின் படங்கள் தினத்தில் மட்டும் அதிகாலை 4 மணி, 5 மணி காட்சிகள் திரையிடப்பட்டன. அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்படம் நள்ளிரவு 12.30 காட்சி கூட திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இனிமேல் தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் திரையரங்குகள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் ரிலீஸ் ஆன தினத்திற்கு மறுநாளே நார்மல் காட்சிகளுக்கு கூட கூட்டம் வருவதில்லை. ஆன்லைன் பைரஸி, திருட்டு வீடியோ பெருகிவிட்ட தொழில்நுட்ப உலகில் 24 மணி நேரமும் திரையரங்குகள் செயல்பட்டால் ரசிகர்கள் கூட்டம் வருமா? என்பது சந்தேகமே என சினிமா வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் கடைகள், தொழிற்சாலைகள் 24 மணி நேரமும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்களும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி உண்டா? என்பது குறித்த அரசின் விளக்கம் இதுவரை வெளிவரவில்லை. அதேபோல் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரமும் மாற்றப்படுமா? என்பது குறித்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது